எகிப்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பிரம்மாண்டமான பிரமிடுகளும், இன்றும் விலகாத மர்மமான வரலாறுகளும் தான். அந்த மர்ம முடிச்சுகளில் ஒன்றைப் அவிழ்க்கும் விதமாக, எகிப்தின் வடகிழக்குப் பகுதியில் 3,000 ஆண்டுகள் பழமையான ஒரு அபூர்வ மணற்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எகிப்திய தொல்பொருள் ஆய்வுத் துறை கண்டுபிடித்துள்ள இந்த மணற்கல், பல நூற்றாண்டுகளாகத் தேடப்பட்டு வந்த ‘மெசன்’ (Mesen) என்ற மறைந்து போன ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க நகரத்தின் ரகசியத்தை உடைக்கப்போவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
டெல் அபு சைஃபி (Tell Abu Seifi) என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மணற்கல் தூணானது, பைபிளின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள ‘மோசேயின் வெளியேற்றப் பயணத்தோடு’ (Exodus) தொடர்புடைய ஒரு முக்கியமான ராணுவப் பாதையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டு துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்ட அந்தப் பிரம்மாண்ட மணற்கல் தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தான்.
எகிப்தின் புகழ்பெற்ற மன்னரான இரண்டாம் ராம்செஸ் (Ramses II) அவர்களின் பட்டப் பெயர்கள் இந்தத் தூணின் மூன்று பக்கங்களில் செதுக்கப்பட்டுள்ளன.
விவிலியக் கதைகளில் வரும் மோசேயின் காலத்தோடு தொடர்புடைய இந்த மன்னரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது, இது அந்தப் புகழ்பெற்ற காலத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மேலும், எகிப்தியக் கடவுளான ‘ஹோரஸ்’, இந்த மெசன் நகரத்தின் அதிபதி என்று அந்தத் தூணில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அந்த இடம் மறைந்து போன மெசன் நகரம் என்பதற்கான மிக வலிமையான ஆதாரமாகத் தொல்பொருள் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், அந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய மற்றும் பலத்த பாதுகாப்புடன் கூடிய கோயில் வளாகம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.
மண்ணால் ஆன செங்கற்களால் கட்டப்பட்ட பிரம்மாண்ட சுவர்கள், தானியக் கிடங்குகள் மற்றும் அந்த இடத்திற்குச் செல்வதற்கான கல்பாதைகள் என ஒரு முழுமையான ராணுவ மற்றும் நிர்வாக மையம் அங்கு செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எகிப்தையும் மத்திய தரைக்கடல் பகுதிகளையும் இணைக்கும் ‘ஹோரஸ் ராணுவப் பாதை’ எனப்படும் ஒரு முக்கிய வழித்தடத்தில் இந்த நகரம் அமைந்திருந்தது.
பிற்காலத்தில் பாரசீகர்கள், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் எனப் பல சாம்ராஜ்யங்கள் இந்த இடத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் தற்போதைய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மணற்கல் தூண் மட்டும் மெசன் நகரத்தைக் கண்டுபிடிப்பதற்கான முழுமையான ஆதாரம் இல்லை என்றாலும், அங்கு கிடைத்துள்ள கோயில் சிதிலங்களும் மற்ற வரலாற்றுத் தரவுகளும் இணைந்து, இது அந்த மறைந்து போன மெசன் நகரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற வாதத்தை வலுப்படுத்துகின்றன.
இந்த மெசன் நகரம் கண்டுபிடிக்கப்பட்டால், பண்டைய எகிப்தின் ராணுவ வியூகங்கள் மற்றும் விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றுப் பாதைகள் குறித்த புதிய உண்மைகள் உலகிற்குத் தெரியவரும்.
இன்னும் பல ரகசியங்களைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ள எகிப்தின் இந்தப் பகுதியில், ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வருங்காலத்தில் இந்த மெசன் நகரம் மனிதகுல வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
