தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள கடன் பத்திரங்கள் மற்றும் ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் தமிழக அரசு சுமார் 12,044 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே தமிழகத்தின் மொத்த கடன் சுமை 32,925 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 20,881 கோடியாக இருந்த இந்தக் கடன் அளவு, வெறும் 30 நாட்களில் இவ்வளவு பெரிய உயர்வைச் சந்தித்திருப்பது பொருளாதார நிபுணர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளியே இத்தகைய கடன் உயர்விற்கு மிக முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், மாநில ஜிஎஸ்டி மற்றும் மத்திய அரசின் வரிப் பகிர்வு என அனைத்து வழிகளிலும் சேர்த்து சுமார் 89,718 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இருப்பினும், இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை மட்டும் சுமார் 25,267 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வரவை விடச் செலவு பல மடங்கு அதிகமாக இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களைத் தடையின்றிச் செயல்படுத்த அரசு தொடர்ந்து கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி வருகிறது.
இந்தச் செலவினப் பட்டியலில் அரசுக்கு மிகப்பெரிய சுமையாக இருப்பது ஏற்கனவே வாங்கிய கடன்களுக்காகச் செலுத்தப்படும் வட்டித் தொகையாகும்.
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 21,176 கோடி ரூபாய் வட்டி கட்டவே செலவிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியச் செலவு 17,237 கோடி ரூபாயாக உள்ளது.
அதாவது, அரசின் மொத்த வருவாயில் ஒரு பெரும் பகுதி பழைய கடன்களைச் சமாளிப்பதற்கும், நிர்வாக ரீதியான கட்டாயச் செலவுகளுக்குமே சரியாகப் போய்விடுகிறது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கடன் வாங்கும் அளவு சுமார் 2,000 கோடி ரூபாய் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், பழைய கடன் சுமைகளையும் நிதிப் பற்றாக்குறையையும் சமாளித்துக்கொண்டு புதிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
ஒருபுறம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருவாயைப் பெருக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், மறுபுறம் உயர்ந்து வரும் கடன் சுமை மாநிலத்தின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்குச் சவாலாக அமையலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிதி நெருக்கடியிலிருந்து தமிழகத்தை மீட்கவும், வருவாய் பற்றாக்குறையைக் குறைக்கவும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எத்தகைய அதிரடிப் பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
