சென்னை மக்களே குடை எடுத்து செல்லுங்கள்…

சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 22ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

மேலும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Related News

Latest News