வகுப்பறையிலேயே உயிரிழந்த 6 வயது சிறுவன்.. CCTV-யில் பதிவான அதிர்ச்சி காட்சிகள்…

ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்த 6 வயது சிறுவன் வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு பாடத்தை முடிக்காததால் ஆசிரியை சிறுவனை தாக்கியதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெற்றோர் கூறுகையில், ஆசிரியையின் கண்டிப்பால் பயந்த சிறுவன் அழுது, இருமியபடி பதற்றமடைந்து மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளனர். பள்ளி வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதில், ஆசிரியை சிறுவனை திட்டிய பின்னர், அவனது சட்டை மற்றும் ட்ரவுசரை சரிசெய்துவிட்டு கன்னத்தில் அறைந்ததாகவும், சில நொடிகளில் சிறுவன் மயங்கி ஆசிரியையின் மடியில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகம் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், சம்பவம் குறித்து வேறு நபர்கள் மூலமாகவே அறிந்ததாகவும் சிறுவனின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக BNSS பிரிவு 194-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், சிறுவனின் மரணம் வேதனையளிப்பதாகக் கூறி, குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Related News

Latest News