தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 2.28 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.
புதிய கார்டு விண்ணப்பிப்பது முதல், முகவரி மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் என அனைத்தும் தற்போது இணையவழியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ரேஷன் கார்டுதாரர்களின் மிக ரகசியமான தனிப்பட்ட தகவல்களுக்குப் மிகப்பெரிய சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘கணினி அவசர கால பதிலளிப்பு குழு’ எனப்படும் CERT-In, தமிழக அரசுக்கு இதுதொடர்பாக அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த எச்சரிக்கையில், தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் சேமிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் ஆதார் எண்கள், செல்போன் எண்கள் மற்றும் வீட்டு முகவரிகள் உள்ளிட்ட முக்கியமான தகவல்களைச் சைபர் குற்றவாளிகள் திருடுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரிசி கார்டுகள், சர்க்கரை கார்டுகள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஏழை எளிய மக்களின் தரவுகள் என 7 கோடி பேரின் வாழ்வாதாரத் தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
இந்தத் தரவுகள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அது மிகப்பெரிய நிதி மோசடிகளுக்கும், தனிநபர் உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கோடிக்கணக்கான மக்களின் தகவல்கள் ஒரே தளத்தில் குவிந்திருப்பதால், ஒரு சிறிய தொழில்நுட்பக் குறைபாடு கூட ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் சிதைத்துவிடும் என மத்திய குழு எச்சரித்துள்ளது.
எனவே, இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை உடனடியாகப் பலப்படுத்த வேண்டும் என்றும், சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்தத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தற்போது போர்க்கால அடிப்படையில் பாதுகாப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
இணையதளத்தில் நவீன ஃபயர்வால் (Firewall) பாதுகாப்பு மற்றும் ஊடுருவல் தடுப்புத் தொழில்நுட்பங்களை நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்களின் தரவுகள் எக்காரணம் கொண்டும் கசியாமல் இருக்க உயர்மட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு இதனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய சூழலில், சாமானிய மக்களின் தகவல் பாதுகாப்பு என்பது எவ்வளவு பெரிய சவாலாக மாறியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
