நிலவின் மர்மமான மேற்பரப்பில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய வடுவை நாசா தற்போது மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான Falcon 9 (பால்கன் 9) ராக்கெட்டின் ஒரு பகுதி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் மீது மோதியதில் உருவான பிரம்மாண்டமான பள்ளத்தின் புகைப்படங்களை நாசாவின் லூனார் ரிகனைசன்ஸ் ஆர்பிட்டர் தற்போது வெளியிட்டுள்ளது.
சுமார் 60 அடி அகலமும், 10 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், நிலவின் தரைப்பகுதியிலிருந்து பல மைல் உயரத்திலிருந்து படம் பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரியில் நிலவுக்கு அனுப்பப்பட்ட தனியார் விண்கலத்தைச் சுமந்து சென்ற அந்த ராக்கெட்டின் மேல் அடுக்கு, தனது எரிபொருள் தீர்ந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மீது மோதியுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் புகைப்படத்தைப் எடுப்பதற்கு நாசா விஞ்ஞானிகள் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டனர். நிலவைச் சுற்றி வரும் விண்கலம், குறிப்பிட்ட அந்தப் பள்ளம் இருக்கும் இடத்திற்கு மேலே வரும் வரை சுமார் ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதுமட்டுமல்லாமல், 60 மைல் உயரத்திலிருந்து அந்த இடத்தை நோக்கித் தனது கேமராவைத் துல்லியமாகச் சரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விண்கலத்தின் வேகத்திற்கு ஏற்ப வெறும் 10 விநாடிகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ படம் பிடித்திருந்தால் கூட, அந்த இலக்கு கேமராவிலிருந்து 10 மைல் தள்ளிச் சென்றிருக்கும். இவ்வளவு இக்கட்டான சூழலிலும், தொழில்நுட்பத் துல்லியத்தால் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பள்ளத்தைச் சுற்றி காணப்படும் கோடுகள் நிலவின் ரகசியங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. பள்ளத்தைச் சுற்றியுள்ள இருண்ட கோடுகள், பல கோடி ஆண்டுகளாக விண்வெளி கதிர்வீச்சுகளால் பாதிக்கப்பட்ட நிலவின் மேற்பரப்புத் துகள்கள் சிதறியதால் உருவானவை.
அதேசமயம், பள்ளத்தின் ஓரங்களில் காணப்படும் பிரகாசமான கோடுகள், ராக்கெட் மோதிய வேகத்தில் நிலவின் அடி ஆழத்திலிருந்து வெளியேறிய புதிய தாதுப் பொருட்கள் ஆகும்.
இது நிலவின் உட்புறக் கட்டமைப்பு குறித்துப் புதிய தகவல்களை விஞ்ஞானிகளுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சாதனையானது நாசா மட்டுமல்லாமல், தென்கொரிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒருங்கிணைந்த முயற்சியால் சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலவில் மனித நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய மோதல்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த ராக்கெட் மோதல் ஒரு விபத்தாக இருந்தாலும், அது நிலவின் ஆழமான அடுக்குகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு ஒரு நல்வாய்ப்பாகவே அமைந்துள்ளது.
சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியால் நிலவின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து வருவது, மனிதகுலம் நிலவில் தடம் பதிப்பதற்கான அடுத்தகட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
