தமிழ்நாடு சட்டசபையில் இன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மக்கள் பணியை தொய்வின்றி மேற்கொள்ளவும், தொகுதி மக்களின் தேவைகளை தொடர்ந்து கவனிக்கவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இதன்படி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் வாகனத்தைப் பயன்படுத்துவதற்காக மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படி வழங்கப்படும். மேலும், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி பணிகளுக்கு உதவியாக ஒருவரை நியமித்து, அவருக்கு ஊதியம் வழங்குவதற்காக மாதம் ரூ.25,000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. ஜோதிமணி, தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வாகனம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட சில நாட்களிலேயே, நடப்பு சட்டசபை தொடரில் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு வெளியானதும் சட்டசபையில் உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். ஜோதிமணி எம்.எல்.ஏ., தனது கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அமைச்சர் ராஜ்மோகன், முதலமைச்சர் விஜயின் நடவடிக்கைகளால் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறினார். அமைச்சர் ஷாஜகானும் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. காமராஜ், முதலமைச்சர் வழங்கும் காரில் செல்வதே பெருமை எனக் குறிப்பிட்டார். பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன.
