தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளையும் நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
16 முதல் 19-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மிதமான மழை தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
இதனிடையே, 17-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
