ஒரே ஒரு ஐடியா.. 6 நண்பர்கள்..’HCL’ உருவானது எப்படி?

இன்று பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு மென்பொருள் நிறுவனமாக உலகையே வியக்க வைத்துக் கொண்டிருக்கும் ஹெச்.சி.எல் (HCL) நிறுவனத்தின் தொடக்கம் எப்படி இருந்தது தெரியுமா? வெறும் ஆறு நண்பர்கள், கையில் இருந்த ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணம்..

இதுதான் அந்தப் பிரம்மாண்ட வெற்றியின் முதல் விதை. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் தொழில்நுட்பத் துறை இன்னும் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, ஒரு சிறிய மொட்டை மாடி அறையில் தொடங்கப்பட்ட இந்தப் பயணம் இன்று ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது. அந்த நெகிழ்ச்சியான ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் இணை நிறுவனர் அஜய் சௌத்ரி.

1976-ம் ஆண்டு, இந்தியாவில் கணினி என்பது பலருக்கும் அறிமுகமில்லாத ஒரு புரியாத புதிராகவே இருந்தது. அப்போதுதான் அஜய் சௌத்ரி உள்ளிட்ட ஆறு இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைத்து இந்தத் துணிச்சலான பயணத்தைத் தொடங்கினர்.

அவர்களிடம் பெரிய அலுவலகங்களோ, கோடிக்கணக்கான முதலீடோ இல்லை. தங்களின் சேமிப்புப் பணம் முழுவதையும் இதற்காகக் கொட்டினர். ஒரு நண்பர் தனது காரையே விற்று நிறுவனத்திற்கான முதலீட்டை வழங்கினார்.

டெல்லியின் கோல்ஃப் லிங்க்ஸ் பகுதியில் உள்ள ஒரு சிறிய ‘பர்சாதி’ எனப்படும் மொட்டை மாடி அறைதான் இவர்களின் முதல் தலைமையகமாக மாறியது.

மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கணினி முழுமையாகத் தயாராவதற்கு முன்பே, வெறும் காகிதத்தில் இருந்த வடிவமைப்பை வைத்துக்கொண்டு இவர்கள் ஆர்டர் பிடிக்கக் கிளம்பினார்கள். தொழில்நுட்பம் குறித்த தங்களின் தெளிவானப் பார்வையால் ஐஐடி காரக்பூர் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து முதல் ஆர்டர்களைப் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் கோயம்புத்தூரில் உள்ள பிரீமியர் மில்ஸ் நிறுவனத்திற்குச் சென்றபோது, தங்களை விடப் பெரிய மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இவர்கள் போட்டி போட வேண்டியிருந்தது. அங்கே கிடைத்த அந்த ஒரு வெற்றிதான் இவர்களுக்கு அடுத்தடுத்த பல கதவுகளைத் திறந்துவிட்டது. ஒரு ஆர்டர் ஐந்தானது, ஐந்து பத்தானது.. இன்று அது ஒரு உலகளாவிய நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நிச்சயமற்ற தன்மை, நீண்ட நேர உழைப்பு, பலமுறை சந்தித்த நிராகரிப்புகள் என அனைத்தையும் தாண்டித்தான் இன்று ஹெச்.சி.எல் 50-வது ஆண்டைத் தொட்டுள்ளது.

ஒரு சாதாரண மனிதன் காணும் பெரிய கனவும், அதனை நோக்கிய துணிச்சலான பயணமுமே மிகப்பெரிய வெற்றிகளைத் தரும் என்பதற்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வரலாறு ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.

“பெரிய கனவுகளைக் காணுங்கள், துணிச்சலாக ரிஸ்க் எடுங்கள், எதற்கும் அஞ்சாமல் முன்னேறுங்கள்” என்பதே வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோர்களுக்கு அஜய் சௌத்ரி சொல்லும் தாரக மந்திரம். சாதாரண இளைஞர்கள் அசாதாரண சாதனைகளைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த வரலாறு ஒவ்வொருவருக்கும் விதைக்கிறது.

Related News

Latest News