தமிழக அரசியல் களத்தில் இப்போது ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் இளம் முகமாகவும், அந்தப் பேரியக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் தூணாகவும் பார்க்கப்பட்ட சிங்கை ராமச்சந்திரன், சமீபத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கோவை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரு இளம் தலைவர், சட்டென்று தவெக-விற்குத் தாவியது அதிமுக முகாமிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது கசிந்துள்ள ஒரு ரகசியத் தகவல் தான் தமிழகத்தின் தொழில்துறை வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது.
தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மைப் பட்டம் பெற்றவர் சிங்கை ராமச்சந்திரன்.
கார்ப்பரேட் மேலாண்மை, தொழில்நுட்பம் மற்றும் அரசியல் அனுபவம் எனப் பன்முகத் திறமைகளைக் கொண்டவர் என்பதால், தமிழகத்திற்குப் பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இந்த உயரிய நிர்வாகப் பொறுப்பிற்கு அவரது பெயர் பலமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தவெக-வில் இணைந்ததாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற லட்சிய இலக்கோடு செயல்படும் முதலமைச்சர் விஜய், அதற்கு ஒரு நவீனச் சிந்தனை கொண்ட, தொழில்நுட்ப அறிவுடைய இளம் நிபுணர் தேவை எனக் கருதுகிறார். கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளைக் கொண்டு வருவதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
தொழில்துறை நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு வலுவான பாலமாகச் செயல்படச் சிங்கை ராமச்சந்திரன் தகுதியானவர் எனச் சில மூத்த அதிகாரிகள் முதலமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே இந்தப் பதவியைப் பிடிக்கப் பல மூத்த அதிகாரிகள் மற்றும் பெரிய தலைகள் வரிசையில் நின்றபோது, சிங்கை ராமச்சந்திரனின் பெயர் அடிபடுவது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலத்தின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவரான அவர் தவெக-வில் இணைந்திருப்பது, அந்தப் பகுதியில் அதிமுக-விற்கு ஒரு பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.
சிங்கை ராமச்சந்திரனின் இந்த ‘புதிய அவதாரம்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா அல்லது இது வழக்கமான அரசியல் ஊகம்தானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படியோ, தவெக-வில் இணைந்த கையோடு அவருக்கு இவ்வளவு பெரிய அதிகாரம் கொடுக்கப்பட உள்ளது, விஜய்யின் அடுத்தகட்ட ‘மாஸ்டர் பிளான்’ என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
