AI தொழில்நுட்பத்தால் இவர்களுக்கு மட்டும் ‘ஜாக்பாட்’! 30% சம்பள உயர்வு – எந்தத் துறை தெரியுமா?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பல துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பறித்து வருவதாக ஒரு அச்சம் நிலவி வரும் சூழலில், ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் இது ஊழியர்களின் சம்பளத்தைப் பன்மடங்கு உயர்த்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வளர்ந்து வரும் பசுமை ஆற்றல் (Green Energy), குறிப்பாகச் சூரிய சக்தித் துறையில் (Solar Industry), ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த ஊழியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், அவர்களின் ஊதியம் முன்னெப்போதும் இல்லாத வகையில் எகிறியுள்ளது.

ஏஐ-யினால் வேலைகள் குறையவில்லை, மாறாக வேலைகளின் தரம் மற்றும் மதிப்பு கூடியுள்ளதாகத் தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சூரிய சக்தி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில், மனிதர்கள் செய்த சலிப்பான மற்றும் திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளை இப்போது ஏஐ இயந்திரங்கள் செய்கின்றன.

தயாரிப்புகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவது, தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வது போன்ற பணிகளைத் தானியங்கி இயந்திரங்கள் மிகத் துல்லியமாகச் செய்கின்றன.

இதனால், சாதாரண தொழிலாளர்களின் தேவை குறைந்தாலும், இந்த ஏஐ இயந்திரங்களை இயக்கவும், அவற்றின் தரத்தைச் சரிசெய்யவும் தெரிந்த நிபுணர்களுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களுக்கு ஆரம்ப நிலையில் 15% வரையிலும், நடுத்தர அளவில் 22% வரையிலும், மூத்த அதிகாரிகளுக்கு 30% வரையிலும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நவிடாஸ் சோலார் (Navitas Solar) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஜய் மேனன் கூறுகையில், “ஏஐ தொழில்நுட்பத்தை வேலைவாய்ப்பு இழப்பாகப் பார்க்கக் கூடாது;

மாறாக, இது அதிகத் திறன் கொண்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2047-ஆம் ஆண்டிற்குள் சுமார் 3.5 கோடி ‘பசுமை வேலைவாய்ப்புகள்’ (Green Jobs) உருவாகப் போவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்குச் சுமார் 16 லட்சம் புதிய வேலைகள் உருவாகும்.

ஆனால், இவை அனைத்தும் பழைய பாணி வேலைகளாக இருக்காது; மாறாக, ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

எதிர்காலத் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்குவது மட்டும் ஒரு தொழிலாளியின் தகுதியாக இருக்காது. அந்த இயந்திரங்கள் தரும் தரவுகளைப் (Data) புரிந்துகொண்டு, அதன் செயல்பாட்டை மேம்படுத்தத் தெரிந்த ஊழியர்களே அதிகச் சம்பளம் பெறும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள்.

எனவே, ஐடி துறையில் மட்டுமல்லாமல், உற்பத்தித் துறையிலும் தொழில்நுட்பம் தெரிந்த ஊழியர்களுக்கே இப்போது மவுசு கூடியுள்ளது. சூரிய சக்தித் துறை இப்போது காட்டும் இந்த மாற்றம், இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் எதிர்காலத்திற்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News