தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நாளை மற்றும் 13ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம். ஏனைய பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 14ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுடன் மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். 15 முதல் 17ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.
இதற்கிடையே, இன்று முதல் 14ஆம் தேதி வரை வட உள்தமிழகத்தில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
மேலும், இன்று முதல் 15ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில், இடையிடையே 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
