தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகள் மற்றும் காரைக்காலிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளையும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். 12 மற்றும் 13ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
14ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் தென் தமிழகப் பகுதிகளிலும், 15 மற்றும் 16ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் இன்று, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.
மேலும், 14ஆம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும். எனவே, அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
