டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்திய வங்கித் துறையின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றி வருகிறது. முன்பு பணம் செலுத்துவது, எடுப்பது, கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பெரும்பாலான சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது மொபைல் செயலிகள் மற்றும் டிஜிட்டல் பேங்கிங் மூலம் பல சேவைகளை வீட்டிலிருந்தே பெற முடிகிறது.
இதன் தாக்கம் வங்கி ஊழியர்களின் பணியிலும் ஏற்பட்டுள்ளது. ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் உள்ளிட்ட முன்னணி தனியார் வங்கிகள் கடந்த நிதியாண்டில் இணைந்து 13,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வெறும் செலவுக் குறைப்பு நடவடிக்கை மட்டுமல்லாமல், வங்கிப் பணிகள் ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு நோக்கி நகர்வதன் விளைவாகவும் பார்க்கப்படுகிறது.
முன்பு ஊழியர்கள் செய்த பல back-end பணிகள் தற்போது மென்பொருட்கள் மூலம் தானியங்கி முறையில் நடைபெறுகின்றன. இதனால் வங்கிகள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை கொண்டு அதிக வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடிகிறது.
அதே நேரத்தில், ஏஐ, கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனாலிசிஸ் மற்றும் இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்பத் திறன் கொண்ட ஊழியர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எஸ்பிஐ ஊழியர்களை சேல்ஸ் பிரிவுக்கு மாற்றி வருவதாகவும், ஹெச்டிஎஃப்சி பேக்-எண்ட் ஊழியர்களை வாடிக்கையாளர் தொடர்பு பணிகளுக்கு மாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் வருங்காலத்தில் வங்கி வேலைக்கு வெறும் வங்கி அனுபவம் மட்டும் போதாது. தொழில்நுட்பம், டேட்டா அனாலிசிஸ், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு திறன்களையும் ஊழியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
