இந்த வாரத்தின் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இரவு வானில் ஒரு கண்கவர் வாணவேடிக்கை நிகழப் போகிறது. ‘பெர்சீட்’ (Perseid) எனப்படும் இந்த விண்கல் மழை, இந்த ஆண்டின் மிகச் சிறந்த வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். குறிப்பாக, வட அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பிரம்மாண்ட ஒளியைக் காணும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நாசாவின் கணக்கின்படி, ஒரு மணி நேரத்திற்கு சுமார் 50 முதல் 100 விண்கற்கள் வரை வானில் எரிந்து விழுவதை நாம் வெறும் கண்களாலேயே பார்க்க முடியும்.
இந்த ஆண்டு பெர்சீட் விண்கல் மழை மிகவும் விசேஷமானது. ஏனென்றால், இது நிகழும் அதே நேரத்தில் ஸ்பெயின், ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து போன்ற நாடுகளில் முழு சூரிய கிரகணமும் நிகழப் போகிறது. அதுமட்டுமின்றி, ஆறு கோள்கள் வரிசையாகத் தோன்றும் அபூர்வ நிகழ்வும் (Six-planet parade) இதே காலக்கட்டத்தில் அரங்கேறுகிறது. பூமி தனது சுற்றுப்பாதையில் பயணிக்கும் போது, ‘ஸ்விஃப்ட்-டட்டில்’ (Swift-Tuttle) என்ற வால்நட்சத்திரம் விட்டுச் சென்ற தூசு மற்றும் துகள்களின் பாதையைக் கடக்கிறது. அந்தத் துகள்கள் பூமியின் வளிமண்டலத்துடன் மிக அதிவேகமாக மோதும் போது ஏற்படும் உராய்வினால் அவை எரிந்து ஒளிக்கீற்றுகளாகத் தெரிகின்றன. இதனைத் தான் நாம் ‘எரிநட்சத்திரம்’ என்று அழைக்கிறோம்.
இந்த விண்கல் மழையைக் காண்பதற்குத் தற்போதைய சூழல் மிகவும் சாதகமாக உள்ளது. வானில் நிலவின் ஒளி அதிகம் இல்லாத ‘அமாவாசை’ காலம் என்பதால், வானம் மிகவும் இருட்டாக இருக்கும். இதனால் மிகச் சிறிய ஒளியைக் கூட நம்மால் தெளிவாகப் பார்க்க முடியும். இதுகுறித்து வானியல் ஆய்வாளர் அபர்ணா வெங்கடேசன் கூறுகையில், “நிலவின் ஒளி இல்லாதது ஒரு வரப்பிரசாதம்; இதன் மூலம் நாம் அதிக எண்ணிக்கையிலான விண்கற்களைப் பார்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். பெர்சீட் விண்கற்கள் மிகவும் பிரகாசமான ‘நெருப்புப் பந்துகளை’ (Fireballs) உருவாக்குவதில் பெயர் பெற்றவை என்பதால், இது காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.
இந்த ஒளியைக் காண விரும்புவோர், நள்ளிரவு முதல் விடியற்காலை வரையிலான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. நகரத்தின் விளக்கு வெளிச்சம் இல்லாத, மேகங்கள் மறைக்காத இருட்டான ஒரு இடத்திற்குச் சென்று, வடக்கு திசையில் உள்ள ‘பெர்சியஸ்’ விண்மீன் மண்டலத்தை நோக்கிக் காத்திருக்க வேண்டும். உங்கள் கண்கள் இருட்டிற்குப் பழக சுமார் அரை மணி நேரம் ஆகும் என்பதால், அந்த நேரத்தில் மொபைல் போன் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்தப் பெர்சீட் விண்கல் மழை, இயற்கை நமக்கு வழங்கும் ஒரு மாயாஜால நிகழ்வு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஒரு மணி நேரத்திற்குச் சுமார் 100 விண்கற்கள் வரை வானில் எரிந்து விழும் இந்தக் கண்கவர் வாணவேடிக்கையை இந்தியாவிலும் பார்க்க முடியுமா? என்ற கேள்வி இப்போது பலரிடையே எழுந்துள்ளது. இதற்கான பதில், நிச்சயம் பார்க்க முடியும் என்பதுதான். இந்தியா வட அரைக்கோளத்தில் (Northern Hemisphere) அமைந்துள்ளதால், இந்த விண்கல் மழையைத் தெளிவாகக் காணும் வாய்ப்பு நமக்கு மிக அதிகமாகவே உள்ளது.
இருப்பினும், இந்தியாவில் இதைப் பார்ப்பதற்கு ஒரு சிறிய சவால் காத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் என்பது இந்தியாவில் தென்மேற்குப் பருவமழைக் காலம் என்பதால், மேகமூட்டம் இந்தத் தடையற்றக் காட்சியை மறைக்க வாய்ப்புள்ளது. எனவே, வானம் மேகங்கள் இன்றித் தெளிவாக இருக்கும் இடங்களில் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
