ஏவுகணைகளை அள்ளிக்கொண்டு வரும் ‘அமெரிக்கா’! நடுங்கும் பசிபிக் கடல்!

அமெரிக்கக் கடற்படை தனது ராணுவ பலத்தை உலகளவில், குறிப்பாகப் பசிபிக் பிராந்தியத்தில் பன்மடங்கு அதிகரிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை அறிவித்துள்ளது.

19 ‘வர்ஜீனியா’ ரக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அதிநவீன ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் வகையில் மாற்றியமைக்க பென்டகன் முடிவு செய்துள்ளது. சீனாவுடனான வளர்ந்து வரும் மோதல் போக்கைக் கருத்தில் கொண்டு, கடலுக்கு அடியில் இருந்தே எதிரிகளைத் துல்லியமாகத் தாக்கும் திறனை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக இந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ‘வர்ஜீனியா பேலோட் மாடியூல்’ (Virginia Payload Module(vpm)) என்ற புதிய தொழில்நுட்பப் பகுதி இணைக்கப்பட உள்ளது.

இந்த நவீன மாற்றத்தின் மூலம் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் சுமந்து செல்லும் ஏவுகணைகளின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் உயரப் போகிறது. தற்போதுள்ள வர்ஜீனியா ரகக் கப்பல்களில் 12 ஏவுகணைத் தளங்கள் மட்டுமே உள்ளன.

ஆனால், சுமார் 84 அடி நீளம் கொண்ட புதிய பகுதியினை இதில் சேர்ப்பதன் மூலம், கூடுதலாக 28 ஏவுகணைகளைச் சுமந்து செல்ல முடியும்.

அதாவது, ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் மொத்தம் 40 ஏவுகணைகளை வைத்துக்கொள்ளலாம். இதில் புகழ்பெற்ற ‘டோமாஹாக்’ ஏவுகணைகள் மட்டுமல்லாமல், ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் பாயும் ‘ஹைப்பர்சோனிக்’ ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்களின் மிகப்பெரிய பலமே அதன் ரகசியத் தன்மைதான். கடலுக்கு அடியில் இருப்பதால், சீன ராணுவத்தின் ரேடார்களில் சிக்காமல் ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘முதல் தீவுச் சங்கிலி’ என்று சொல்லப்படும் (அதாவது,First Island Chain) பகுதிக்குள் ஊடுருவித் தாக்கும் வல்லமை இதற்கு உண்டு.

இதுவரை அமெரிக்கா பயன்படுத்தி வந்த ‘ஓஹியோ’ ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் 154 ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அவை தற்போது படிப்படியாக ஓய்வு பெறத் தொடங்கியுள்ளன. அவற்றுக்குப் பதிலாகவே இந்த நவீன வர்ஜீனியா ரகக் கப்பல்களை அமெரிக்கா முன்னிறுத்துகிறது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், அமெரிக்காவை விடச் சீனா அதிக எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டி முடித்துள்ளது.

சீனா 10 நீர்மூழ்கிக் கப்பல்களை அறிமுகப்படுத்திய நிலையில், அமெரிக்கா 7 கப்பல்களை மட்டுமே உருவாக்கியுள்ளது. இத்தகைய ஒரு சூழலில், நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையை விட, அவற்றின் தாக்குதல் திறனை அதிகரிப்பதன் மூலம் சீனாவிற்குப் பதிலடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்த ராணுவ நகர்வு பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News