ரஷ்யாவுக்காக களமிறங்கிய 50,000 வடகொரிய வீரர்கள்! கிம் செய்த சரியான ‘சம்பவம்’!

உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரில் ஒரு புதிய மற்றும் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாகக் களம் இறங்க சுமார் 50,000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் சுமார் 30,000 வீரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அந்த எண்ணிக்கை 50,000 ஆக உயர்ந்துள்ளது. இது உக்ரைன் ராணுவத்திற்குப் பெரும் சவாலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான ‘மூலோபாய கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் எல்லைக்குள் ஏற்கனவே சில வடகொரிய ஏவுகணைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது நவீன போர்க்கலையில் வடகொரியா புதிய அனுபவங்களைப் பெற ரஷ்யா வழிவகுப்பதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதுள்ள உளவுத்துறை தகவல்களின்படி, ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பகுதியில் சுமார் 14,000 வடகொரிய வீரர்கள் ஏற்கனவே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 6 ஏவுகணை ஏவுதளங்களைக் கொண்ட ஒரு தனி வடகொரிய ஏவுகணைப் பிரிவு மேற்கு ரஷ்யாவிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் உக்ரைன் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

தன்னிடம் போதிய வான் பாதுகாப்பு வசதிகள் இல்லாததை ரஷ்யா சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வடகொரியாவின் உதவியை நாடி வருவதாக உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் இந்தத் தலையீட்டைச் சமாளிக்க, தென்கொரியா தங்களுக்கு ராணுவ ரீதியாக உதவ வேண்டும் என்று ஜெலென்ஸ்கி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களில் தென்கொரியாவுடன் இணைந்து செயல்படத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வடகொரியா ரஷ்யாவிற்கு வழங்கி வருவது, இந்தப் போரை ஒரு புதிய உலகளாவிய மோதலாக மாற்றி வருவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related News

Latest News