வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு ‘எச்சரிக்கை’! RBI-ன் புதிய வழிகாட்டுதல்!

சொந்தமாக ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டு வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்களா? பொதுவாக, வீட்டுக் கடன் வாங்கும் போது குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது ‘கூட்டு விண்ணப்பதாரராக’ (Co-applicant) சேர்த்துக்கொண்டால் அதிக கடன் கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம்.

ஆனால், அதில் ஒளிந்துள்ள ஒரு முக்கியமான ஆபத்தை வங்கிகள் இப்போது சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் (CIBIL Score) 750-க்கும் மேல் மிகச் சிறப்பாக இருந்தாலும் கூட, உங்களோடு கடனுக்கு விண்ணப்பிக்கும் நபரின் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

வங்கிகள் வீட்டுக் கடனை அனுமதிக்கும் போது, முதன்மை விண்ணப்பதாரரை மட்டும் பார்ப்பதில்லை. உங்களுடன் இணையும் கூட்டு விண்ணப்பதாரரின் கடன் வரலாற்றையும் (Credit History) மிக நுணுக்கமாக ஆய்வு செய்கின்றன.

ஒருவேளை உங்கள் கூட்டு விண்ணப்பதாரர் கடந்த காலங்களில் வாங்கிய வேறு ஏதேனும் கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, அல்லது தவணைகளைத் தாமதமாகச் செலுத்தி இருந்தாலோ, அது ஒட்டுமொத்த கடன் விண்ணப்பத்தையும் பாதிக்கும். உங்கள் வருமானம் அதிகமாக இருந்தாலும், கூட்டு விண்ணப்பதாரரின் பலவீனமான கடன் வரலாறு வங்கியின் பார்வையில் ஒரு பெரிய ரிஸ்க்காகத் தெரியும்.

எனவே, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். முதலில், இருவருமே தங்களது கிரெடிட் ரிப்போர்ட்டைச் சரிபார்க்க வேண்டும். அதில் ஏதேனும் தவறுகள் அல்லது நிலுவைத் தொகைகள் இருந்தால், விண்ணப்பிக்கும் முன்பே அவற்றைச் சரிசெய்துவிட வேண்டும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே; மீதமுள்ள பங்குகள் உங்கள் வருமானத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் ஏற்கனவே நீங்கள் எவ்வளவு கடன் தவணைகளைச் (EMI) செலுத்தி வருகிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

வழக்கமாக, உங்கள் மாத வருமானத்தில் 40 முதல் 50 சதவீதத்திற்கு மேல் கடன் தவணைகள் இருக்கக் கூடாது என்பதில் வங்கிகள் உறுதியாக இருக்கும். இதனை ‘FOIR’ என்று அழைப்பார்கள்.

நீங்கள் கூட்டு விண்ணப்பதாரரைச் சேர்க்கும் போது, இருவரின் மொத்த வருமானம் மற்றும் இருவரின் மொத்த கடன்களையும் சேர்த்துத் தான் வங்கி கணக்கிடும். எனவே, புதிய கடன் வாங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே கிரெடிட் கார்டு பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதும், பழைய நிலுவைகளை அடைப்பதும் நல்லது.

கூட்டு விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் மட்டுமே கூட்டு விண்ணப்பம் உங்களுக்குப் பலன் தரும்; இல்லையெனில் அது உங்களது கடன் கனவையே கலைத்துவிடும்.

Related News

Latest News