அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் சுமார் 5.8 முதல் 7.6 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தின் ஓரிரு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் வரும் 10-ந்தேதியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை பெய்யக்கூடும். 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. வட உள் தமிழகத்தில் 10 முதல் 12-ந்தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.

மேலும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் இன்று மற்றும் நாளை 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

Latest News