அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்த ஹெலிகாப்டர், வாஷிங்டன் வான்பரப்பில் ஒரு பயணிகள் விமானத்திற்கு மிக அருகே சென்று மோதலில் இருந்து தப்பிய அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 2:30 மணி அளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதிபரின் ஹெலிகாப்டரான ‘மரைன் ஒன்’ (Marine One), வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திற்கு ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் மிகவும் நெருக்கமாக வந்துள்ளது.
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் (Air Traffic Control) நிகழ்ந்த தகவல் பரிமாற்றக் குளறுபடிகளே இந்த அபாயகரமான சூழலுக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, இத்தகைய பாதுகாக்கப்பட்ட வான்பரப்பில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு இடையே குறைந்தது 1.5 மைல் கிடைமட்ட இடைவெளியும், 500 அடி செங்குத்து இடைவெளியும் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இந்தச் சம்பவத்தின் போது அந்தப் பாதுகாப்பு தூரம் மீறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அதிபர் டிரம்ப் கலிபோர்னியா செல்வதற்காக ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) ஆகிய அமைப்புகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய், “மரைன் ஒன் ஹெலிகாப்டரை உலகின் மிகச்சிறந்த விமானிகள் இயக்குகிறார்கள், எந்தவொரு கட்டத்திலும் அதிபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். வான் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரு விமானிகளுடனும் தொடர்பில் இருந்ததாகவும், தேவையான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் FAA தெரிவித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாஷிங்டனில் ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு வாஷிங்டன் வான்பரப்பில் பாதுகாப்பு விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டன. அத்தகைய சூழலில், நாட்டின் அதிபர் பயணம் செய்த ஹெலிகாப்டரே ஒரு பயணிகள் விமானத்தின் அருகே சென்றிருப்பது அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் பாதுகாப்பு விதிமுறைகளில் மேலும் சில மாற்றங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
