விண்வெளிக்கு செல்லும்1.35 மில்லியன் பெயர்கள்! ஆகஸ்ட் 30-ல் நடக்கும் ‘சம்பவம்’!

விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டத் தயாராகி வருகிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம். பூமியிலிருந்து பல லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள விண்வெளியின் ஆழத்திற்கு, மனிதகுலத்தின் அடையாளமாக சுமார் 13 லட்சத்து 50 ஆயிரம் பேரின் பெயர்களை நாசா அனுப்ப உள்ளது.

இதற்காக, வரவிருக்கும் ‘நான்சி கிரேஸ் ரோமன்’ (Nancy Grace Roman) விண்வெளி தொலைநோக்கியில், இந்த பெயர்கள் அடங்கிய ஒரு சிறிய மெமரி கார்டு மற்றும் நினைவுப் பலகையை நாசா விஞ்ஞானிகள் வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.

புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இந்த மெமரி கார்டு பொருத்தப்பட்டது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களின் பெயர்களுடன், நிலவுக்குச் செல்லவிருக்கும் ஆர்ட்டெமிஸ் 2 மற்றும் 3 விண்வெளி வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

விண்வெளி ஆய்வில் மனிதர்களின் பங்களிப்பை என்றென்றும் நினைவுபடுத்தும் ஒரு பாரம்பரியமாக இதனை நாசா மேற்கொண்டு வருகிறது. இந்தப் பிரம்மாண்ட தொலைநோக்கிக்கு ‘ஹப்பிளின் தாய்’ என்று அழைக்கப்படும் நாசாவின் முதல் தலைமை வானியலாளர் டாக்டர் நான்சி கிரேஸ் ரோமனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ரோமன் தொலைநோக்கி, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்ச் பாயிண்ட் 2’ (L2) என்ற பகுதிக்குச் செல்ல உள்ளது. தற்போதைய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி இருக்கும் அதே பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ள இது, ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு பெரிய பரப்பளவை ஒரே நேரத்தில் படம் பிடிக்கும் திறன் கொண்டது.

இதன் மூலம் பிரபஞ்சத்தில் உள்ள பில்லியன் கணக்கான விண்மீன் மண்டலங்களை வரைபடமாக்கவும், ஆயிரக்கணக்கான புதிய கிரகங்களைக் கண்டறியவும், கருந்துளைகள் மற்றும் இருண்ட ஆற்றல் தொடர்பான மர்மங்களை அவிழ்க்கவும் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சக்திவாய்ந்த ‘ஃபால்கன் ஹெவி’ ராக்கெட் மூலம் இந்தத் தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட உள்ளது. அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விண்வெளியின் ரகசியங்களைத் தேடும் பயணத்தில், 1.35 மில்லியன் மக்களின் பெயர்களைச் சுமந்து கொண்டு, பிரபஞ்சத்தின் எல்லையற்ற ஆழத்திற்கு இந்தப் புதிய விண்வெளித் தூதுவன் பயணிக்கப் போவது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் ஒரு பெருமையான தருணமாகவே பார்க்கப்படுகிறது.

Related News

Latest News