சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உள் கர்நாடகா, இலங்கையின் தென்மேற்கு பகுதி மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வெவ்வேறு உயரங்களில் வளிமண்டல சுழற்சிகள் நிலவுவதாகவும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை சென்னை உள்ளிட்ட வட மற்றும் மத்திய தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். ஆகஸ்ட் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தேனி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 8 முதல் 10 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று, நாளை மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். மேலும், குமரிக்கடல் பகுதியில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
