இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஒரு மிகப்பெரிய புயல் வீசத் தொடங்கியுள்ளது. கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற போது இருந்த அந்தப் பிரம்மாண்டமான ஆதரவு, இப்போது மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
குறிப்பாக, இந்திய அணியின் சில ‘சீனியர்’ வீரர்கள் கம்பீரின் பயிற்சியாளர் முறை குறித்துப் பிசிசிஐ (BCCI) மற்றும் முன்னாள் வீரர்களிடம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் தோல்விகளுக்குத் தான் பொறுப்பேற்காமல், வீரர்களையும் மற்ற ஊழியர்களையும் கம்பீர் குறை கூறுவதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
கடந்த ஓராண்டிற்கு முன்பு இருந்த அளவிற்குப் பிசிசிஐ-ன் முழுமையான ஆதரவு இப்போது கம்பீருக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற முக்கியமான தொடர்களில் இந்திய அணி சந்தித்த தோல்விகளுக்குத் தனது முடிவுகள் தான் காரணம் என்பதை ஒத்துக்கொள்ளக் கம்பீர் மறுப்பதாகப் பிசிசிஐ அதிகாரிகள் கருதுகின்றனர்.
மாறாக, வீரர்களின் செயல்பாடு மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மீதே அவர் பழி போடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது டிரெஸ்ஸிங் ரூமிலும் ஒருவிதமான பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் “அணியில் டிரான்சிஷன் என்ற ஒன்றே இல்லை” என்று கூறிய கம்பீர், இப்போது தோல்விகளுக்குத் ‘மாறுதல் காலம்’ தான் காரணம் என முரண்பட்ட கருத்துக்களைக் கூறி வருவதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கம்பீர் கேட்ட அனைத்து வசதிகளையும், அவருக்குப் பிடித்தமான உதவிப் பயிற்சியாளர்களையும் பிசிசிஐ வழங்கிய போதிலும், அதற்கேற்ற முடிவுகளை அவரால் தர முடியவில்லை என்பது அதிகாரிகளின் வாதமாக உள்ளது. குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகுவது மற்றும் அணியின் பேட்டிங் வரிசையில் நிலவும் தடுமாற்றம் ஆகியவை கம்பீரின் தலைமைத்துவத்தின் மீது கேள்விகளை எழுப்பியுள்ளன.
இருப்பினும், 2027-ஆம் ஆண்டு வரை அவருக்கு ஒப்பந்தம் இருப்பதால், இப்போதே அவரை நீக்குவது பிசிசிஐ-க்கு ஒரு சிக்கலான முடிவாக இருக்கும். ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், ஒரு புதிய பயிற்சியாளரைத் தேடுவது அவ்வளவு எளிதல்ல என்பதும் கம்பீருக்கு ஒரு சாதகமான அம்சமாகும்.
இந்தச் சூழலில், வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்க உள்ள இலங்கைத் தொடர் கௌதம் கம்பீருக்கு ஒரு மிகப்பெரிய ‘அக்னிப் பரீட்சையாக’ அமையப் போகிறது. இந்தத் தொடரிலும் இந்திய அணி சொதப்பினால், கம்பீர் மீது பிசிசிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளது.
பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையிலான இந்த வார்த்தைப்போர், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தைப் பாதிக்குமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கம்பீர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு வீரர்களை அரவணைத்துச் செல்வாரா அல்லது இந்த மோதல் இன்னும் முற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
