உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ‘இந்திய ராணுவம்’!

லடாக் மற்றும் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் நிலவும் கடும் குளிரைச் சமாளித்து, போர்க்களத் தயார்நிலையை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

கிழக்கு லடாக் போன்ற இமயமலைப் பகுதிகளில் நிலவும் மைனஸ் 42 டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் உரையாமல் செயல்படக்கூடிய ‘எக்ஸ்.டபிள்யூ.ஜி’ (XWG – Xtreme Weather Grade) எனப்படும் புதிய ரக டீசலை இந்திய ராணுவம் தற்போது பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்திய ராணுவமும், உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ஒரு ஆண்டிற்கும் குறைவான காலத்திலேயே இந்த அதிநவீன எரிபொருளைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளன.

இதுவரை லடாக் போன்ற பகுதிகளில் ராணுவ வாகனங்கள் மற்றும் டாங்கிகளைச் சீராக இயக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது. சாதாரண டீசலில் இருக்கும் மெழுகுப் பொருட்கள் கடும் குளிரில் உறைந்து விடுவதால், வாகனங்களின் எஞ்சின் இயங்காமல் நின்றுவிடும்.

இதனைத் தவிர்க்க ராணுவ வீரர்கள் நாள் முழுவதும் அவ்வப்போது வாகனங்களை ஸ்டார்ட் செய்து எஞ்சினைச் சூடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை நீடித்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய ‘எக்ஸ்.டபிள்யூ.ஜி’ டீசல், மைனஸ் 42 டிகிரி குளிரிலும் திரவ நிலையிலேயே இருக்கும் என்பதால், எவ்விதத் தடையுமின்றி எஞ்சின்களை உடனடியாக இயக்க முடியும்.

இந்த எரிபொருள் பிஎஸ்-6 (BS-VI) தரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், ராணுவத்தின் தற்போதைய டாங்கிகள் மற்றும் வாகனங்களில் எவ்வித மாற்றமும் செய்யாமலேயே நேரடியாகப் பயன்படுத்த முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

குறிப்பாக, லடாக்கின் நியோமா மற்றும் தௌலத் பெக் ஓல்டி போன்ற 14 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான பராமரிப்பு மையங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள டி-90(T-90) மற்றும் டி-72 (T-72)போர் டாங்கிகள், கே-9 வஜ்ரா பீரங்கிகள் இனி எந்த நேரத்திலும் எதிரிகளைத் துவம்சம் செய்யத் தயார் நிலையில் இருக்கும்.

ராணுவத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் இந்த கண்டுபிடிப்பை ‘கேம் சேஞ்சர்’ என்று வர்ணித்துள்ளார். இது ராணுவத்தின் நடமாட்டத்தையும், போர் முனையில் செயல்படும் திறனையும் பல மடங்கு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ராணுவப் பயன்பாடு மட்டுமின்றி, கடும் குளிரால் பாதிக்கப்படும் மலைப்பகுதிகளில் வாழும் சாமானிய மக்களின் வாகனப் பயன்பாட்டிற்கும் இந்த டீசல் வழங்கப்பட உள்ளது. எல்லைப் பாதுகாப்பில் தொழில்நுட்ப ரீதியாக இந்தியா எடுத்து வரும் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள், இந்திய ராணுவத்தின் பலத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளன.

Related News

Latest News