ஜப்பானுக்கு இப்படி ஒரு நிலைமையா? 40 ஆண்டுகளில் இல்லாத சோகம்! காப்பாற்ற களமிறங்கிய டிரம்ப்!

உலக நிதிச் சந்தையில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. டாலருக்கு நிகரான ஜப்பானிய நாணயமான ‘யென்’-ன் மதிப்பு, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சரிவைச் சந்தித்த நிலையில், அதனைக் காப்பாற்ற ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஒரு மிகப்பெரிய கரன்சி தலையீட்டை மேற்கொண்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை “நட்புக்கான அடையாளம்” என்று வர்ணித்துள்ள நிலையில், ஜப்பான் தனது நாணயத்தின் மதிப்பை நிலைநிறுத்த இன்னும் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஜப்பானிய நாணயம் பலவீனமடைந்து வருவதால் அவர்கள் உதவியைக் கோரியதாகவும், அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான ஜப்பானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தலையீடு ஜப்பானுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திற்கும் ஒரு நல்வாய்ப்பாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு டாலருக்கு நிகரான யென் மதிப்பு 164-லிருந்து சுமார் 157-ஆகக் குறைந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

ஜப்பான் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சந்தையில் நிலவி வரும் தேவையற்ற ஏற்றத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கருவூலத்துடன் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் ‘யென்’ வாங்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசு, நாட்டில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தப் போராடி வரும் சூழலில், இந்த சர்வதேசக் கூட்டு நடவடிக்கை அவருக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் பலத்தைத் தந்துள்ளது. ஜப்பான் மட்டும் சுமார் 59 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை இதற்காகப் பயன்படுத்தியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான வட்டி விகித இடைவெளி ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஜப்பானிய மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டு வரும் வேளையில், அமெரிக்காவின் இந்த ஆதரவு அந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானைப் போலவே தென் கொரியாவும் தனது நாட்டு நாணயத்தைப் பாதுகாக்கச் சந்தையில் தலையிடத் தொடங்கியுள்ளது, ஆசிய நாடுகளிடையே நிலவும் பொருளாதாரப் பதற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இரு வல்லரசு நாடுகளின் இந்த இராஜதந்திர நகர்வு, சர்வதேச நிதிச் சந்தையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News