இந்திய ஐடி துறைக்கு ஆப்பு? – ஸ்ரீதர் வேம்பு விடுத்த பகீர் எச்சரிக்கை!

இந்திய ஐடி துறையின் அடையாளமாகத் திகழும் ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இந்திய இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து விடுத்துள்ள ஒரு மிக முக்கியமான எச்சரிக்கை தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, இந்திய இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே வரும் காலங்களில் நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஐடி நிறுவனங்களின் முதலீட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணமாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னரெல்லாம் ஒரு ஐடி நிறுவனம் தனது வளர்ச்சிக்காகப் புதிய ஊழியர்களைத் தேர்வு செய்யவே முன்னுரிமை அளிக்கும். ஆனால், தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. புதிய ஊழியர்களுக்குச் செலவிடப்பட வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நிதி, தற்போது ஏஐ கட்டமைப்புகள், பிரம்மாண்ட டேட்டா சென்டர்கள் மற்றும் அதிநவீன சர்வர்களை உருவாக்கவே திருப்பி விடப்படுகிறது. சர்வர்கள் மற்றும் மெமரி சாதனங்களின் விலை சர்வதேச சந்தையில் கணிசமாக உயர்ந்துள்ளதால், ஐடி நிறுவனங்கள் மனித உழைப்பை விடத் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்கே அதிக முக்கியத்துவம் தர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அண்மைக்காலமாகப் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யவில்லை என்றாலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிகப்பெரிய தேக்க நிலை நிலவுவதை ஸ்ரீதர் வேம்பு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் மென்பொருட்களை மிக வேகமாக உருவாக்க முடிவதால், சந்தையில் மென்பொருட்களின் தேவைக்கும் மேலாக உற்பத்தி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மென்பொருள் துறை ஒரு பொதுவான சந்தையாக மாறி வருவதாகவும், இனி வெறும் வளர்ச்சியைத் தாண்டி, ஒரு நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு மற்றும் தரமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

ஐடி துறை மட்டுமல்லாது, உற்பத்தித் துறையிலும் ஆட்டோமேஷன் எனப்படும் தானியங்கி தொழில்நுட்பம் புகுந்துள்ளதால், மனித உழைப்பிற்கான தேவை குறைந்து வருகிறது. இது பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைத்து, மக்களுக்கு மலிவான விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தாலும், அந்தப் பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் போதுமான வருமானம் இருக்குமா என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்விக்குறி. தொழில்நுட்ப மாற்றங்களை நாம் சரியாகக் கையாளத் தவறினால், அது மிகப்பெரிய பொருளாதாரச் சமநிலையின்மையை ஏற்படுத்தும் என ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தை குறித்த இவருடைய இந்தக் கருத்துக்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News