நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்… ஆவின் வெளியிட்ட புதிய தயாரிப்பு!! முழு விவரம்…

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் தனது தயாரிப்புப் பட்டியலில் புதியதாக ‘ஆவின் மில்க் ரஸ்க்’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பால், தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், பால்கோவா, மைசூர் பாக், மில்க் பிஸ்கெட் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வரும் ஆவின், தற்போது ரஸ்க் சந்தையிலும் களமிறங்கியுள்ளது.

தனியார் நிறுவனங்களின் ரஸ்க் பாக்கெட்டுகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களும் எளிதாக வாங்கும் வகையில் குறைந்த விலையில் இந்த புதிய தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 100 கிராம் கொண்ட ஆவின் மில்க் ரஸ்க் ரூ.20-க்கும், 60 கிராம் கொண்ட சிறிய பாக்கெட் ரூ.12-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆவின் பாலின் நன்மைகளுடன், பிரீமியம் தரத்தில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இந்த மில்க் ரஸ்க், மொறுமொறுப்பான சுவை மற்றும் தரமான தயாரிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேநீருடன் சாப்பிட ஏற்ற பதத்தில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஆவின் மில்க் ரஸ்க், மாநிலம் முழுவதும் உள்ள ஆவின் பாலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தரமான தயாரிப்பை மலிவான விலையில் வழங்கும் ஆவினின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனியார் பிராண்டுகளுக்கு மாற்றாக, குறைந்த விலையில் தரமான ரஸ்கை வழங்கும் புதிய தேர்வாக ஆவின் மில்க் ரஸ்க் உருவெடுத்துள்ளது.

Related News

Latest News