‘இனிமேல்தான் ஆரம்பம்!’ ஆகஸ்ட் முதல் மாறும் வானிலை! காத்திருக்கும் ‘பேராபத்து’!

உலக வானிலை ஆய்வு நிறுவனம் விடுத்துள்ள சமீபத்திய எச்சரிக்கை அறிக்கை, ஒட்டுமொத்த உலகையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், ‘எல் நினோ’ (El Nino) வானிலை மாற்றம் மிகத் தீவிரமடையப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த வெப்பநிலை மாற்றம், உலகெங்கிலும் வரலாறு காணாத வெப்ப அலைகளையும், எதிர்பாராத இயற்கைச் சீற்றங்களையும் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் பூமிக்கு, இந்த எல் நினோ மேலும் எரிபொருளை ஊற்றுவது போல அமையும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(António Guterres) இது குறித்து விடுத்துள்ள அறிக்கை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

“எல் நினோ இப்போது நமது கதவு வாசலில் இல்லை, அது வீட்டிற்குள்ளேயே நுழைந்து வெப்பத்தை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது” என்று அவர் எச்சரித்துள்ளார்.

காட்டுத்தீ, கடல்களில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வழக்கத்திற்கு மாறான வெப்பக் காற்று ஆகியவை இனி வரும் காலங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் என்றும், இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல் மட்டத்தின் வெப்பநிலை வழக்கத்தை விட 2.9 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இந்த எல் நினோ தாக்கம் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும். பொதுவாக எல் நினோ காலங்களில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விடக் குறைய அதிக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக வறட்சி மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதே சமயம், இந்தியப் பெருங்கடல் டைபோல் (Indian Ocean Dipole) எனப்படும் நிகழ்வும் இணையும்போது, சில பகுதிகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கும், மற்ற பகுதிகளில் கடும் வறட்சியும் என வானிலை சமநிலையற்ற நிலைக்குத் தள்ளப்படும்.

இது மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கும் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் எரிவாயு போன்ற படிம எரிபொருட்களின் பயன்பாடே இந்த நெருக்கடிக்கு அடிநாதமாக உள்ளது என்று ஐநா பொதுச்செயலாளர் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாம் இப்போதே விழிப்புணர்வுடன் செயல்பட்டு, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறினால், வரும் காலங்களில் இயற்கைச் சீற்றங்கள் இன்னும் கொடியதாக மாறும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

Related News

Latest News