2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி (ITR) தாக்கல் செய்ய இன்று (ஜூலை 31) கடைசி நாளாகும். குறிப்பாக ITR-1 மற்றும் ITR-2 படிவங்களை தாக்கல் செய்யும் சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட வகை மூலதன ஆதாயம் பெறுவோர் இன்று கட்டாயம் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். இதுவரை 5.02 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
இன்றைய காலக்கெடுவை தவறவிட்டால், தாமதமாக ITR தாக்கல் செய்யலாம். ஆனால், வருமான வரிச் சட்டம் பிரிவு 234F-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதமும், ரூ.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5,000 அபராதமும் செலுத்த வேண்டும். அடிப்படை வரி விலக்கு வரம்புக்குக் கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு தாமதக் கட்டணம் இல்லை.
மேலும், செலுத்த வேண்டிய வரி நிலுவையில் இருந்தால், பிரிவு 234A-ன் கீழ் மாதத்திற்கு 1 சதவீத வட்டி விதிக்கப்படும். அதேபோல், வரி திருப்பித் தொகை (Refund) பெற தகுதியுள்ளவர்களுக்கு, தாமதமாக தாக்கல் செய்தால் அந்தத் தொகை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படலாம்.
இதற்கிடையில், தணிக்கைக்கு உட்படாத வணிக மற்றும் தொழில் வருமானம் உள்ளவர்கள் ITR-3 அல்லது ITR-4 படிவங்களை ஆகஸ்ட் 31 வரை தாக்கல் செய்யலாம். கணக்கு தணிக்கைக்கு உட்பட்ட வரி செலுத்துவோருக்கு அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தேவையானவர்கள் காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்து அபராதம் மற்றும் கூடுதல் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
