PF கிளைம் தாமதமா? இனி உடனே புகார் அளிக்கலாம்!!

பிஎஃப் (வருங்கால வைப்பு நிதி) கணக்கில் இருந்து பணம் எடுப்பது, பென்ஷன் மற்றும் காப்பீடு தொடர்பான கோரிக்கைகளை விரைவாக தீர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, EPFO-வில் முறையாக அனைத்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் கிளைம்கள் 20 நாட்களுக்குள் கட்டாயம் தீர்வு செய்யப்பட வேண்டும்.

இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிஎஃப் கணக்கு வைத்துள்ளனர். மருத்துவச் செலவு, திருமணம், வீடு கட்டுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை பெற முடியும். ஆனால் இதுவரை கிளைம்கள் தீர்வு பெற பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய விதிப்படி, உரிய காரணமின்றி 20 நாட்களுக்கு மேல் கிளைம் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஆண்டுக்கு 12 சதவீத வட்டி அபராதம் விதிக்கப்படும். அந்த அபராதத் தொகை அதிகாரியின் சம்பளத்திலிருந்தே வசூலிக்கப்படும்.

20 நாட்களை கடந்தும் உங்கள் கோரிக்கை நிலுவையில் இருந்தால், EPFO-வின் குறைதீர்ப்பு தளமான EPFiGMS-ல் UAN மற்றும் கிளைம் எண்ணைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். மேலும், 1800 118 005 என்ற கட்டணமில்லா எண் அல்லது 14470 உதவி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். 60 நாட்களுக்கும் மேலாக தாமதமானால், தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் தாமதத்திற்கான காரணத்தை கேட்கவும் முடியும்.

மேலும், உங்கள் பிஎஃப் கணக்கில் ஆதார், கேஒய்சி மற்றும் வங்கி விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். விரைவில் அமலாகவுள்ள EPFO 3.0 திட்டத்தின் மூலம் ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளது.

Related News

Latest News