மாதம் ரூ.3,000 பெறும் வாய்ப்பு: உடனே பதிவு செய்யுங்கள்..

அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் வாழ்க்கையை பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (PM-SYM) என்ற பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் இணைந்து, 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் பயனாளிகள் தங்களது வயதுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர பங்களிப்பை தொடர்ந்து செலுத்த வேண்டும்.

அவர்கள் செலுத்தும் தொகைக்கு இணையாக மத்திய அரசும் அதே அளவு பங்களிப்பை வழங்கும். இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு நிலையான மாதாந்திர வருமானம் கிடைப்பதால், தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பு மேம்படும்.

சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கைவினைக் கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், உணவக மற்றும் உணவுச் சேவை பணியாளர்கள் உள்ளிட்ட சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள்.

பதிவு செய்ய விரும்புவோர் ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள பொது சேவை மையத்தில் (CSC) பதிவு செய்து கொள்ளலாம். சென்னை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் அதிகளவில் இத்திட்டத்தில் இணைய தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு சென்னை சுற்றுலா அலுவலகத்தை அல்லது சுற்றுலா அலுவலரை 9176995863 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News