ஈரானில் அதிர வைக்கும் போராட்டம்! உதடுகளை தைத்துக் கொண்ட 1500 கைதிகள்!
ஈரானின் கெசெல் ஹெசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள், அந்நாட்டு அரசு அண்மைக்காலமாகத் தீவிரப்படுத்தி வரும் மரண தண்டனைகளுக்கு எதிராக ஒரு விபரீதமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தக் கைதிகள் ஒட்டுமொத்தமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியதுடன், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய ஒருபடி மேலே சென்று தங்கள் உதடுகளை ஊசியால் தைத்துக் கொண்டுள்ளனர்.
இந்தத் தீவிரமான போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்ற ஆறு கைதிகள், அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாகத் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்ட ஒரு சம்பவம் தான். மரண தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கைதிகளின் கோரிக்கைக்குச் சிறை நிர்வாகம் செவிசாய்க்காததால், ஆத்திரமடைந்த கைதிகள் ஊசி மற்றும் நூலைத் தையல் கருவியாகப் பயன்படுத்தித் தங்கள் உதடுகளைத் தைத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்வதேச சமூகத்தை அதிர வைத்துள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் புள்ளிவிபரங்களின்படி, ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 424 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுக்கு எதிராகப் போராடிய இருவர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரித்துள்ளது. தற்போது சுமார் 60 கைதிகள் எந்த நேரத்திலும் தூக்கிலிடப்படலாம் என்ற அபாய நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
போராட்டத்தைக் கலைக்கும் முயற்சியாகச் சிறை நிர்வாகம் பல கைதிகளை ரகசிய இடங்களுக்கு மாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உதடுகள் தைக்கப்பட்ட நிலையில், முறையான மருத்துவ உதவி இன்றிப் பல கைதிகளின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசு இதுவரை இந்தப் போராட்டம் குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்காத நிலையில், சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு மனித உயிர்களைக் காக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
