‘இந்தியா’ கூட்டணியில் CM விஜய்? டெல்லியில் இருந்து வரும் ராகுல்!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு மிகப்பெரிய கூட்டணி மாற்றம் நிகழப்போகிறதா என்ற எதிர்பார்ப்பு தற்போது டெல்லி வரை எதிரொலித்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வர உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை ‘இந்தியா’ (INDIA) கூட்டணியில் இணைப்பது குறித்து அவரிடம் காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நாளில் பங்கேற்க வரும் ராகுல் காந்தியிடம், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மூலம் இந்த விவகாரத்தைத் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த வருகையின் போது ராகுல் காந்தி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றதும், அதன் பின்னர் டெல்லியில் இருவரும் இரவு விருந்தில் சந்தித்துக் கொண்டதும் இவர்களுக்கு இடையிலான நெருக்கமான நட்பை உறுதிப்படுத்தியது.

அதேபோல், நீட் விவகாரத்திற்காக ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோது தமிழக வெற்றிக் கழகம் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது, இந்தக் கூட்டணி உருவாகுவதற்கான ஆரம்பப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் ‘மிஷன் 2029’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. அதாவது, வரும் 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமராக முன்னிறுத்த வேண்டும் என்றால், தமிழகத்தில் தங்களது செல்வாக்கை அதிகரிக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது.

இதற்காகத் தமிழகத்தில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள முதலமைச்சர் விஜய்யின் ஆதரவு தங்களுக்குக் கண்டிப்பாகத் தேவை எனப் பல காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இதற்காகவே ராகுல் காந்தியின் இந்தச் சென்னை வருகையை ஒரு பொன்னான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ராகுல் – விஜய் இடையிலான இந்தச் சந்திப்பு உறுதி செய்யப்பட்டால், அதில் வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

கூட்டணியின் பெயர், ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் தவெகவிற்கு இந்தியா கூட்டணியில் வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்படலாம். இந்த மெகா கூட்டணி உறுதியானால், அது தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News