சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த கருத்துகளை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
கூட்டத்தில் சில ஆசிரியர் சங்கங்கள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறையாவது சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பேசிய அமைச்சர், சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது தொடர்பான கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார். முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய திருத்தம், பழைய ஊதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சங்கங்களால் முன்வைக்கப்பட்டன.
சங்கங்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் தனிப்பட்ட மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும் என்றும், கோரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல் உள்ளிட்ட பாடங்களில் பணியாற்றும் 11,773 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சங்கத் தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தினார்.
