தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த எம். நர்மதா தாக்கல் செய்த பொதுநல மனுவில், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட விடுப்பு வழங்காதது சமத்துவ உரிமைக்கு எதிரான மறைமுகப் பாகுபாடு எனக் கூறப்பட்டது.
மேலும், தற்செயல் விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பு போன்றவை மாதவிடாய் காரணமாக ஏற்படும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளுக்கு போதுமானதாக இல்லை என்றும், இதனால் பெண்கள் வலியுடனேயே பணியாற்றவோ அல்லது ஊதியத்தை இழக்கவோ நேரிடுகிறது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் கொள்கையை உருவாக்கவும், அதற்கான ஆய்வுக் குழுவை அமைப்பது குறித்தும் அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து, குழு அமைப்பு மற்றும் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடகா, பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மாதவிடாய் விடுப்பு கொள்கைகளைப் போல, தமிழகத்திலும் விரிவான திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
