தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), தனது சேவைகளை மேலும் எளிமையாக்கும் நோக்கில் யு.பி.ஐ. (UPI) மூலம் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.
இதற்காக ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப தளமான சைட்ஸ் 2.01(CITES 2.01) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், புதிய தளத்தில் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதாக உறுப்பினர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பழைய பி.எப். கணக்குகளின் தகவல்கள் புதிய தளத்தில் முழுமையாக இடம்பெறவில்லை என்றும், இணையதளத்தில் உள்நுழைவதில் சிக்கல், தளம் மெதுவாக இயங்குவது, பணம் பெறுவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்க தாமதம் ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன.
முன்பு விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சிக்கல்களை சரிசெய்யும் பணியில் EPFO தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், முக்கிய தொழில்நுட்ப பிரச்சினைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் யு.பி.ஐ. மூலம் பி.எப். தொகையை பெறும் வசதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதி ‘பீம்’ செயலி மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான ஏ.பி.ஐ. கட்டமைப்புகளை பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் இணைந்து உருவாக்கி வருகின்றன.
டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தி, உறுப்பினர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
