உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில், ஒரு மிகப்பெரிய எண்ணெய் கப்பல் கண்ணிவெடியில் மோதி வெடித்துச் சிதறிய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ‘தஸ்னிம்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த எண்ணெய் கப்பல் ஈரான் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட கடல்வழிப் பாதையை மீறிச் சென்றதாகவும், அப்போது கடலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்துக்குள்ளான கப்பலின் பெயர், அதில் இருந்த கச்சா எண்ணெயின் அளவு அல்லது உயிரிழப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், அந்த கப்பல் விதிமுறைகளை மீறிய ஒரு ‘சட்டவிரோத’ கப்பல் என்றே ஈரான் ஊடகங்கள் வர்ணித்து வருகின்றன.
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாகக் கடும் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்கா தனது வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஈரானும் தனது பதிலடித் தாக்குதல்களை நிறுத்தியிருந்தது.
“அமெரிக்கா அமைதி காத்தால் நாங்களும் அமைதி காப்போம்” என்று ஈரானிய ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா தெரிவித்திருந்த நிலையில், இந்த விபத்து மீண்டும் ஒரு மிகப்பெரிய போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் ஒரு தற்செயலான விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது குறித்த விவாதங்கள் தற்போது உலக அரங்கில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது ஒரு மிகப்பெரிய ‘மெகா தாக்குதல்’ நடத்தப்போவதாக எச்சரித்திருந்தாலும், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் இதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகளைத் தடுக்கும் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளின் இருப்பு அமெரிக்க ஆயுதக் கிடங்குகளில் குறைந்து வருவதாகவும், இது ஒரு மிகப்பெரிய போரை எதிர்கொள்ளப் போதுமானதாக இருக்காது என்றும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ராணுவத் தளபதிகள், இந்தப் போரை விரிவுபடுத்துவது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியும் என ட்ரம்பிற்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இத்தகைய இக்கட்டான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் வெடித்திருப்பது எரிபொருள் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்பதால் ஒட்டுமொத்த உலகமும் தற்போது மத்திய கிழக்கு நாடுகளை அச்சத்துடன் கவனித்து வருகிறது.
