பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் ‘பாரத்கேஸ் லைட் ஜிப்’ என்ற புதிய பிரீமியம் எல்பிஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் முக்கிய அம்சமாக, வழக்கமான எஃகு சிலிண்டர்களைவிட மிகவும் எடை குறைந்த லைட் காம்போசிட் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டர் துருப்பிடிக்காத தன்மை கொண்டது.
மேலும், சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை வெளிப்புறத்திலிருந்தே எளிதாகக் காண முடியும். பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், நவீன மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.
புதிய எல்பிஜி இணைப்பைப் பெறும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதுடன், சிலிண்டர் விநியோகமும் விரைவாக நடைபெறும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மும்பையில் அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தை, 2026 ஆகஸ்ட் 15-க்குள் 24 மாநிலங்களில் உள்ள 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த BPCL இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதற்கு முன்பு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் தேவைக்கேற்ப எல்பிஜி சிலிண்டர் விநியோக சேவையை பெங்களூருவில் தொடங்கியது.
அதன் மூலம் வாடிக்கையாளர்கள் புதிய 10 கிலோ HP நாவ்யா காம்போசிட் சிலிண்டரை எரிவாயு இணைப்பு இல்லாமலேயே ஆர்டர் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விரு நிறுவனங்களின் புதிய முயற்சிகளும், எரிவாயு சேவைகளை நவீனமாகவும், எளிதாகவும், விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகின்றன.
