டைனோசர்களை அழித்த அந்த ‘ராட்சத’ விண்கல் எது?உலகையே நடுங்க வைத்த ‘விஞ்ஞானிகள்’ !

சுமார் 6 கோடியே 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, இந்த பூமியை அசைக்க முடியாத சக்தியாக ஆட்சி செய்து கொண்டிருந்த டைனோசர்கள், ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக எப்படி அழிந்தன என்பது இன்றும் பலரை வியப்பில் ஆழ்த்தும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.

மெக்சிகோவின் யுகடான் தீபகற்பத்தில் விழுந்த ஒரு ராட்சத விண்கல் தான் இதற்குக் காரணம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், அந்த விண்கல் எந்த வகையைச் சேர்ந்தது? அது எங்கிருந்து வந்தது? என்ற கேள்விக்கு இப்போது சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒரு மிகத்தெளிவான பதிலைக் கண்டுபிடித்துள்ளது.

‘சயின்ஸ் அட்வான்ஸ்’ (Science Advances) இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, டைனோசர்களின் அழிவுக்குக் காரணமான அந்தப் பாறை, சூரிய குடும்பத்திலேயே மிகவும் அரிய வகை விண்கல்லான ‘கார்பனேசியஸ் CO சாண்ட்ரைட்’ (Carbonaceous CO Chondrite) என்று உறுதி செய்துள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் அகலமுள்ள இந்த மாபெரும் விண்கல் பூமியில் மோதியபோது ஏற்பட்ட தாக்கம், கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பயங்கரமானது. அது மோதிய வேகத்தில் உருவான நிலநடுக்கங்கள், சுனாமிகள் மற்றும் காட்டுத்தீ ஆகியவை பூமியின் ஒரு பகுதியைச் சிதைத்தன.

ஆனால், 75 சதவீத உயிரினங்களை அழித்த மிக முக்கியமான காரணி, அந்த மோதலால் வளிமண்டலத்தில் பரவிய ராட்சதப் தூசி மண்டலம்தான். இந்தப் புதிய ஆய்வின்படி, இந்த விண்கல்லில் சல்பர் எனப்படும் கந்தகத்தின் அளவு மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.

இதனால், டைனோசர்களின் அழிவுக்குச் சல்பர் வாயுவை விட, சூரிய ஒளியை மறைக்கும் அளவிற்குப் பரவிய அந்தப் பெரும் தூசியே மிக முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர்.

இந்த அரிய வகை விண்கல் எங்கிருந்து வந்தது தெரியுமா? நமது சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில், அதாவது வியாழன் கிரகத்திற்கு அருகில் உள்ள குறுங்கோள் பட்டையிலிருந்து இது கிளம்பி வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பூமியில் கண்டறியப்படும் விண்கற்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே இந்த ‘CO சாண்ட்ரைட்’ வகையைச் சேர்ந்தவை. அப்படியென்றால், கோடிக்கணக்கான விண்கற்களில் ஒன்றான இந்த மிக அரிய மற்றும் பழமையான பாறை, சரியாகப் பூமியைத் தாக்கி ஒரு மாபெரும் சகாப்தத்தையே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்பதுதான் வியப்பான விஷயம்.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், பாரிஸ் மற்றும் பிரஸ்ஸல்ஸ் நகரங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பூமியின் களிமண் அடுக்குகளில் படிந்துள்ள நிக்கல் ஐசோடோப்புகளைத் தீவிரமாக ஆய்வு செய்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த விண்கல் தாக்குதலால் ஏற்பட்ட தட்பவெப்ப மாற்றங்கள் பல ஆண்டுகளுக்கு நீடித்ததால், டைனோசர்களால் தப்பிப் பிழைக்க முடியாமல் போனது. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த ஒரு விபத்துதான், இன்று மனிதர்களாகிய நாம் இந்த உலகில் வாழ்வதற்கு வழிவகுத்துள்ளது. இயற்கையின் இந்த விசித்திரமான மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Related News

Latest News