கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இது உண்மையல்ல என தெரிவித்துள்ளது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சமீபத்தில் ‘தொலைதொடர்பு விதிகள் 2026’ தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு, கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். கட்டணங்கள் தற்போதைய அளவை விட 4 முதல் 6 மடங்கு வரை உயர்த்தப்பட உள்ளதாகவும், இதனால் பல கோடி டி.வி. இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
மேலும், அதிகப்படியான லைசென்ஸ் கட்டணம் விதிக்கப்படுவதால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசின் விளக்கத்தில், இணையதளங்களில் பரவும் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் கேபிள் டி.வி. மற்றும் டி.டி.எச். சேவைகளுக்கான கட்டண உயர்வு தொடர்பான எந்த விதிகளும் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு துறையில் உள்ள வழிகாட்டுதல்களை ஒருங்கிணைத்து, நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், சேவைகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
