அம்மா இல்லத்தில் தளபதி? வேதா நிலையம் வாங்க பேச்சுவார்த்தையா? பரபரப்பு தகவல்…

தமிழ்நாடு அரசியலில் முக்கிய அடையாளமாகக் கருதப்படும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ பங்களாவை முதலமைச்சர் விஜய் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தற்போது முதலமைச்சர் விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நகரின் மையப்பகுதியான போயஸ் கார்டனுக்கு குடியேறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ‘வேதா நிலையம்’ பங்களாவின் உரிமை தொடர்பாக நீண்டகால சட்டப் போராட்டம் நடைபெற்றது. தற்போது அந்தச் சொத்தின் உரிமை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவிடம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் தரப்பினர் ஏற்கனவே ஜெ. தீபாவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்களாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.350 கோடி என மதிப்பிடப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், போயஸ் கார்டனில் வசிக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் அண்டை வீட்டுக்காரராக முதலமைச்சர் விஜய் மாறுவார். அதே நேரத்தில், இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த ஒப்பந்தம் நடைபெறவில்லை என்றால், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் புதிய வீடு கட்டுவது அல்லது அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மாறுவது போன்ற மாற்று திட்டங்களும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா நிலையம்’ பங்களாவை விஜய் வாங்குவாரா என்பது குறித்த தெளிவான தகவல், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே உறுதியாகும்.

Related News

Latest News