‘நாங்கள் நியாயமாக நடந்து கொள்வோம்’!! அமெரிக்காவை பங்கமாய் கலாய்த்த ஈரான்!

உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் இப்போது ஒரு ‘கட்டணப் போராக’ மாறியிருக்கிறது. சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெயில் பெரும் பகுதி இந்தப் பாதை வழியாகத்தான் பயணிக்கிறது.

போர் பதற்றம் காரணமாக இந்தப் பாதை மூடப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஹார்முஸ் நீரிணையைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாகவும், அந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த 20 சதவீதக் கட்டணம் என்பது கப்பல் நிறுவனங்களுக்கு ஒரு மிகப்பெரிய சுமையாகப் பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான், ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, டிரம்பின் இந்த அறிவிப்பை மிக நக்கலாக விமர்சித்துள்ளார். “அமெரிக்க ஜனாதிபதி சொல்வது முற்றிலும் சரி. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் எவருக்கும் இந்தச் சேவைக்காக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

ஈரான் எப்போதுமே இந்த ஜலசந்தியின் பாதுகாவலராக இருந்து வருகிறது, என்றென்றும் அப்படியே இருக்கும். 20% என்பது நிச்சயமாக மிக அதிகம். நாங்கள் நியாயமாக நடந்துகொள்வோம்.” என்று ஈரான் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுமே ஹார்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று மாறி மாறி உரிமை கொண்டாடி வருவது உலக நாடுகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் சரக்குகளைக் கொண்டு செல்லவே கப்பல் நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தையே வசூலிக்கின்றன.

அப்படி இருக்கையில், வெறும் பாதுகாப்புக்காக 20 சதவீதக் கட்டணம் வசூலிப்பது என்பது உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை விண்ணைத் தொடச் செய்யும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டிரம்பின் இந்த அதிரடி முடிவுக்குக் கப்பல் நிறுவனங்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஈரானின் இந்தப் பதிலடி டிரம்பிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கப் போகிறது? கப்பல்கள் யாருக்குக் கட்டணம் செலுத்தப் போகின்றன? என்ற இந்தக் குழப்பம் நீடித்தால், அது உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்யும். வல்லரசு நாடுகளின் இந்த மோதலால், இறுதியில் சாமானிய மக்கள் தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்ற சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும் என்பதுதான் கசப்பான உண்மையாக உள்ளது.

Related News

Latest News