அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் உலகளாவிய அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில், ஈரானின் அதிகாரப்பூர்வ தலைநகர நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள சர்வதேச ஹிட் லிஸ்ட் [Hit List] உலக நாடுகளின் தலைவர்களை உலுக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அலி கமேனியின் மகனும், ஈரானின் புதிய ஆன்மீகத் தலைவருமான மொஜ்தபா கமேனி [Mojtaba Khamenei] அண்மையில் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் இந்த அதிகாரப்பூர்வ வரைபடம் [Infographic] வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகள் அனைவரும் தங்களது படுக்கையில் நிம்மதியான மரணத்தைக் காண மாட்டார்கள் என்றும், அவர்கள் அனைவரும் பழிவாங்கப்படுவார்கள் என்றும் மொஜ்தபா கமேனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
ஈரானின் பிரபல ஹம்ஷஹ்ரி [Hamshahri] நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பழிவாங்கும் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் சேர்த்து பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் [Keir Starmer], பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் [Emmanuel Macron] மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி [Giorgia Meloni] உள்ளிட்ட பதின்மூன்று உலகத் தலைவர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
மேலும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
போரின் போது அமெரிக்காவின் போர் விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதித்ததன் மூலம், ஐரோப்பிய நாடுகள் இந்தத் தாக்குதலுக்குத் துணை நின்றுவிட்டதாக ஈரான் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அதே நேரத்தில், தந்தை கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி, இன்னும் பொதுவெளியில் தோன்றாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஈரானின் இந்த பகிரங்க மரண அச்சுறுத்தல் சர்வதேச எல்லையில் ஒரு மிகப்பெரிய ராணுவப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
