வானத்தை பிளந்த ‘தீப்பிழம்புகள்’! ஈரான் மீது அமெரிக்கா நள்ளிரவில் குண்டுமழை!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வளைகுடா பகுதியில் மூண்டுள்ள போர், தற்போது உலகையே உலுக்கும் வகையில் ஒரு மிக உக்கிரமான எல்லையை எட்டியுள்ளது. சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைத் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர துடிக்கும் ஈரானிய ராணுவ நிலைகள் மீது, அமெரிக்கா இன்று அதிகாலை மீண்டும் ஒரு மிகப்பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பான சென்ட்காம் (CENTCOM), அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் மிக முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas), கெஷ்ம் தீவு (Qeshm Island) மற்றும் சிரிக் (Sirik) ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள ஈரானிய ராணுவ தளங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் அடுக்கடுக்கான குண்டுகளை வீசித் தகர்த்துள்ளன.

இந்த தாக்குதலில் ஈரானின் கடலோரப் பகுதிகள் முழுவதும் ராட்சத தீப்பிழம்புகளுடனும், அடர்ந்த கரும்புகையுடனும் வானுயர எரியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சைப்ரஸ், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் வணிகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) நடத்திய தாக்குதலுக்குப் பழிவாங்கவே, அமெரிக்கா இந்தத் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. “சிவில் மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காகவே, அதிபர் ட்ரம்பின் நேரடி உத்தரவின் கீழ் ஈரானிய படைகளைத் தண்டிக்கும் வகையில் இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று சென்ட்காம் அறிவித்துள்ளது.

மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தி “மறு உத்தரவு வரும் வரை” மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ள போதிலும், மாற்றுப் பாதையான தெற்கு கடல்வழிப் பாதை வழியாகப் போக்குவரத்து தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 17 அன்று இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் முற்றிலும் தகர்ந்துள்ளதால், வளைகுடாப் பகுதியில் உள்ள குவைத், பஹ்ரைன் போன்ற அண்டை நாடுகளின் மீதும் ஏவுகணைத் தாக்குதல்கள் பரவி வருகின்றன. இந்த போர் எங்கு போய் முடியும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News