தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க-வில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடிக்கத் தயாராகி வருகிறது.
கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மாற்று வியூகத்தை வகுத்து வருவதாகக் கொங்கு மண்டல அரசியல் வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கசிந்துள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினர். ஆனால், தனித்துச் செயல்பட நினைத்த எடப்பாடி பழனிசாமி இதற்கு உடன்படவில்லை.
இதன் காரணமாக அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ-க்கள் சிலர், கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாகச் செயல்பட்டனர். தொடர்ந்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். ஆனால், வேலுமணி மற்றும் சண்முகம் தரப்பினர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. மீண்டும் ஒரு இடைத்தேர்தலைச் சந்திப்பது தேவையற்ற ஆபத்து என அவர்கள் கருதுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பா.ஜ.க-வின் பின்னணி ஆதரவோடு அ.தி.மு.க-வை உடைத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க ஒரு பக்கா பிளானை அவர்கள் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . தற்போது அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் நாற்பத்திரண்டாகக் குறைந்துள்ளது.
இதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது இருபத்தி எட்டு முதல் இருபத்தியொன்பது எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் திரட்டிவிட்டால், தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகாமல் நேரடியாகவே தவெக அரசுக்கு ஆதரவளிக்க முடியும். தற்போது வேலுமணி தரப்பிடம் பதினைந்து முதல் பதினேழு எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருக்கும் நிலையில், மீதமுள்ள எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி முகாமில் உள்ளவர்களிடம் அவர்கள் தீவிரமாகப் பேசி வருகின்றனர்.
இதனைத் தவெக தலைவர் விஜய்யும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய கரூர் கூட்டத்தில் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்த விஜய், அ.தி.மு.க-வை ‘தீர்ந்துபோன சக்தி’ என்று மட்டுமே விமர்சித்தார். அ.தி.மு.க-வின் அதிருப்தி நிர்வாகிகள் பலருடன் தவெக தரப்பு நேரடியாகத் தொடர்பில் இருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.
தங்களது கட்சியின் எம்.எல்.ஏ-க்களை வேலுமணி தரப்பு வளைப்பதைத் தடுத்து நிறுத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பும் தற்போது தீவிரமான எதிர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அ.தி.மு.க-வில் அரங்கேறி வரும் இந்த உள்கட்சி அதிகாரப் போட்டி, தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப் போகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
