பாகிஸ்தானின் விசித்திர முடிவு! ‘எல்லாத்துக்கும் ஆர்மி தானா?’ சந்தி சிரிக்கும் உலக நாடுகள்!

பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, இப்போது புதிய தலைவலியாக மக்கள் தொகை பெருக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

இதனைத் தடுக்க அந்நாட்டு அரசு எடுத்துள்ள ஒரு விசித்திரமான முடிவு, தற்போது சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனிரை அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தற்போது களமிறக்கியுள்ளார்.

பாகிஸ்தானின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கண்காணித்து, புதிய கொள்கை சீர்திருத்தங்களை வகுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இணைந்திருப்பதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சர் சையத் முஸ்தபா கமல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை எனப் பல்வேறு சர்வதேச விவகாரங்களில் தலையிட்டு வந்த பாகிஸ்தான் ராணுவம், இப்போது நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சமூகப் பணிகளையும் கையில் எடுத்துள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த கடந்த மூன்று ஆண்டுகால முயற்சிகள் தோல்வியடைந்ததால், வேறு வழியின்றி ராணுவத் தளபதியின் உதவியை நாடியுள்ளதாகப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மக்கள் தொகையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான், தற்போது இரண்டு புள்ளி ஐந்து ஐந்து சதவீத அசுர வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது அந்நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகக் கருதப்படுகிறது என்று அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சகம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் நாற்பது வயதிற்கு உட்பட்டவர்களாகவும், அறுபத்தியாறு சதவீதம் பேர் முப்பது வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாகவும் உள்ளனர். இவ்வளவு பெரிய இளைய தலைமுறைக்குத் தேவையான வேலைவாய்ப்பு, உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்க முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.

ஒரு நாட்டின் சமூகப் பிரச்சனையைக் கையாள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் ராணுவத் தளபதியைக் குழு உறுப்பினராக நியமித்திருப்பது, பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுவதாகச் சர்வதேச சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். எல்லைகளைப் பாதுகாக்க வேண்டிய ராணுவத்தால் மக்கள் தொகையை எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்ற கேலிப் பேச்சுகளும் கிளம்பியுள்ளன.

Related News

Latest News