சென்னை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு… வானிலை அப்டேட்!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கோடை வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலாக அமைந்தது.

இந்த நிலையில், இன்று மாலையும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக மேகமூட்டம் உருவாகியுள்ளதுடன், கிழக்கு-மேற்கு திசையில் மேகப் பரவலும் காணப்படுகிறது.

மேலும், வட கடலோர தமிழகப் பகுதிகளில் கீழ்மட்ட காற்று குவிவதால், இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். சில இடங்களில் திடீர் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் ஈரப்பதமான தென்கிழக்கு காற்றும், தமிழகத்தின் உள்பகுதிகளில் இருந்து வீசும் தென்மேற்கு காற்றும் ஒன்றிணைவதே இந்த மழைக்கு முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News