அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் தற்போது ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகப் (CENTCOM) படைகள் ஈரானின் பல்வேறு முக்கிய நகரங்கள் மீது மீண்டும் ஒருமுறை அதிரடியான ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் முக்கியத் துறைமுக நகரங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழியப்பட்டு வருவது ஒட்டுமொத்த உலகையுமே அதிர வைத்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள சபஹார்(Chabahar) மற்றும் கொனாரக் (Konarak) ஆகிய நகரங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சபஹார் நகரமே இருளில் மூழ்கியுள்ளதாகவும், அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்த சத்தம் கேட்டதாகவும் ஈரானியச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதைவிட அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ஈரானின் அணுசக்தி மையம் அமைந்துள்ள புஷெர் (Bushehr) நகரத்திலும் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அபு மூசா தீவு மற்றும் சிரிக் நகரத்தின் பல பகுதிகளும் அமெரிக்கத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
அமெரிக்காவின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய அத்துமீறல்கள்தான். கடந்த சில நாட்களில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைக் கடுமையாகக் கண்டித்துள்ள அமெரிக்கா, “இனி மிரட்டல்களுக்கு இடமில்லை, நேரடி நடவடிக்கையே தீர்வு” என்ற நிலைக்கு வந்துள்ளது.
இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “நேற்று நீங்கள் கப்பல்களைத் தாக்கியதற்கான தண்டனைதான் இது! மீண்டும் ஒருமுறை இப்படி நடந்தால், நிலைமை இன்னும் மிக மோசமாக இருக்கும் (Will get much worse!)” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஒருபுறம் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், ஈரானின் இந்தத் தொடர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. “ஒப்பந்தம் மதிக்கப்படாதபோது அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என்று சென்ட்காம் படைகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் சர்வதேச வர்த்தகத்திற்கு ஈரான் ஒரு அச்சுறுத்தலாக இருப்பதை முறியடிப்பதே அமெரிக்காவின் இப்போதைய ஒரே இலக்காக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் மீண்டும் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் இந்தச் சூழல், உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
