இந்தியாவுக்கு ஈரான் சொன்ன ‘தேங்க்யூ’ ! நெகிழவைக்கும் பின்னணி!

சர்வதேச அரசியல் மேடையில் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஆழமான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியின் அரசுமுறை இறுதிச்சடங்கில் இந்தியா காட்டிய உயரிய மரியாதைக்கு, ஈரானியத் தூதரகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நீண்டதொரு பதிவை வெளியிட்டுள்ள ஈரான் தூதரகம், “இந்தியாவின் இந்த நட்பு, கருணை மற்றும் இதயப்பூர்வமான மரியாதையை ஈரான் ஒருபோதும் மறக்காது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் துயரமான நேரத்தில் ஈரானுக்கு ஆதரவாக இந்தியா ஒரு உயர்மட்டக் குழுவை அனுப்பி வைத்திருந்தது. பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் தலைமையிலான இந்தக் குழு, தெஹ்ரானுக்கு நேரில் சென்று காமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது.

இதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ஆகியோருடன் சீக்கிய, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் இந்தியா சார்பில் ஈரானுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த ‘வேற்றுமையில் ஒற்றுமை’ பண்பு ஈரானிய மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் பல்வேறு மதத் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொண்டது, இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் மனிதநேயப் பிணைப்பைக் காட்டுகிறது.

ஈரானின் தேசியத் துக்கத்தின்போது இந்தியா காட்டிய இந்த ஒருமைப்பாடு, வரும் காலங்களில் இரு நாடுகளின் நட்புறவை இன்னும் பலப்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரானைத் தனிமைப்படுத்த முயன்று வரும் சூழலில், இந்தியா காட்டிய இந்த ராஜதந்திர நட்பு சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தெஹ்ரானில் நடைபெற்று வரும் காமேனியின் இறுதி ஊர்வலம், அந்த நாட்டின் நவீன வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் கூட்டமாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 10 முதல் 12 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கருப்பு உடையணிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வரும் ஜூலை 9-ஆம் தேதி காமேனியின் உடல் அவரது பிறந்த ஊரான மஷாத் நகரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. துயரமான வேளையில் தோள் கொடுத்த இந்தியாவின் இந்த மனிதாபிமானச் செயல், ஈரான் மக்களின் இதயங்களில் இந்தியாவிற்கு ஒரு நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளதை இந்த ‘நன்றி’ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

Latest News