உங்கள் வீட்டுப் பீரோவிலும், வங்கி லாக்கர்களிலும் சும்மா உறங்கிக் கொண்டிருக்கும் தங்க நகைகள், இனி உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தைத் தரப்போகின்றன. இந்தியக் குடும்பங்களிடம் சுமார் 25,000 டன் தங்கம் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்தத் தங்கத்தை நாட்டின் பொருளாதாரப் புழக்கத்திற்குக் கொண்டு வர மத்திய அரசு ஒரு மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘தங்க பணமாக்கல் திட்டத்தை’ (Gold Monetisation Scheme) தற்போது முற்றிலுமாகப் புதுப்பித்து, சாமானிய மக்களும் எளிதில் பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை வங்கிகள் மட்டுமே தங்கத்தை டெபாசிட்டாகப் பெற்று வந்த நிலையில், இனி உங்கள் ஊரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நகைக் கடைகளிலேயே உங்களின் தங்கத்தை ஒப்படைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நீங்கள் ஒப்படைக்கும் தங்கத்தின் தூய்மையைப் பரிசோதித்து, அதற்கு இணையான வட்டித் தொகையை அரசு உங்களுக்கு வழங்கும்.
திட்டத்தின் காலம் முடிந்த பிறகு, உங்கள் விருப்பப்படி தங்கமாகவோ அல்லது அதற்கு இணையான பணமாகவோ நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். பழைய திட்டத்தில் பரம்பரை நகைகளை உருக்க வேண்டுமே என்ற தயக்கமும், வருமான வரித்துறையின் கெடுபிடிகளுக்குப் பயந்துமே மக்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், புதிய திட்டத்தில் இத்தகைய நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தும் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்தத் தங்க இருப்பில் வெறும் 5 சதவீதத் தங்கத்தைச் சேகரித்தாலே, சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடு இந்தியப் பொருளாதாரத்திற்குள் நுழையும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வது பெருமளவு குறையும் என்பதால், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் கணிசமாக உயரும்.
இதைக் கருத்தில் கொண்டுதான், நாட்டு மக்கள் அனைவரும் ஒரு வருடத்திற்குப் புதிய தங்கம் வாங்குவதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அண்மையில் உருக்கமான கோரிக்கை விடுத்திருந்தார்.
தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய முதலீட்டு ஆதாரம் என்பதை உணர்த்தும் வகையில் இந்தத் திட்டம் அமையப்போகிறது. வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தை லாக்கரில் வைத்து வாடகை கட்டுவதற்குப் பதிலாக, அதை அரசிடம் ஒப்படைத்து வட்டி வருமானம் பெறுவது ஒரு புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் அடங்கிய விவரங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
